நகை அடகு வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; ரூ.10 லட்சம் கொடுக்காததால் மர்மநபர்கள் ஆத்திரம்

வேலூர் அருகே நகை அடகு வியாபாரி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-27 14:24 GMT

வேலூர்:

வேலூர் அருகே ரூ.10 லட்சம் கொடுக்காததால் நகை அடகு வியாபாரி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 29). இவர் வீட்டையொட்டி நடை அடகு கடை வைத்துள்ளார். இந்த கடையில் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். நேற்று இரவு முகேஷ்குமார் நகை அடகு கடையை பூட்டி விட்டு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் 1 மணியளவில் வீட்டு மாடியின் முன்பகுதியில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஜன்னல் கண்ணாடி லேசாக சேதமடைந்தது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு முகேஷ்குமார் குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் வேகமாக அங்கு சென்றனர். அதற்குள் 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

இதுகுறித்து முகேஷ்குமார் உடனடியாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் முகேஷ்குமார் மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து முகேஷ்குமார் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முகேஷ்குமாரிடம் வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் அடிக்கடி நகை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் செல்போனில் முகேஷ்குமாரை தொடர்பு கொண்டு 10 நாட்களுக்குள் ரூ.10 லட்சம் தரும்படியும், இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அதற்கு அவர் பணம் தர முடியாது என்று தெரிவித்துள்ளார். அதன்பின்னரும் 3 பேரும் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் முகேஷ்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து சிறிதுநேரத்தில் செல்போனில் அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் ரூ.10 லட்சம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இன்னும் சில தினங்களில் பணம் கொடுக்காவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தையும் சும்மா விட மாட்டோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய 2 மர்மநபர்கள் மற்றும் செல்போனில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர்களை தீவிரமாக தேடி வருகிறோம். ஓரிருநாளில் இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்