பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது

Update: 2023-03-14 18:45 GMT

கடலூர்:

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக 245 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 69 மாணவர்கள், 14 ஆயிரத்து 322 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 391 பேர் 125 தேர்வு மையங்களில் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தவிர கடலூர் மத்திய சிறைச்சாலையில் 13 கைதிகளும், 494 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வு மையத்திற்கு காலை 9.40 மணிக்கு வர வேண்டும் என்று அறிவித்தாலும் மாணவர்கள் முன்கூட்டியே வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே அமர்ந்து படித்தனர்.

பறக்கும் படையினர் கண்காணித்தனர்

தொடர்ந்து 9.40 மணிக்கு தேர்வு மையத்திற்குள் செல்ல ஆரம்பித்தனர். 10 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் சென்றதும் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கினர். மொத்தம் 27 ஆயிரத்து 629 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 1,762 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க 125 முதன்மை கண்காணிப்பாளர்கள், 125 துறை அலுவலர்கள், 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 28 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் தேர்வு மையத்தை கண்காணித்தனர். இது தவிர 250 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை மற்றும் நிலைப்படை அலுவலர்களும் மாணவர்கள் யாராவது காப்பி அடித்து தேர்வு எழுதுகிறார்களா? என்று கண்காணித்தனர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் பகுதிக்குட்பட்ட தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். முன்னதாக தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்