கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் மக்களவை எம்.பிக்கள் குழு ஆய்வு

மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலையின் உற்பத்தி பகுதிகளை மக்களவை எம்.பிக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.;

Update:2022-05-27 11:22 IST


மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் கடந்த 2013-ம் ஆண்டு கடல்நீரை குடிநீராக்கும் முதல் ஆலையை அமைத்தது. அதில் தினசரி 11 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு அடையாறு, ஆலந்தூர், கண்ணகி நகர், பெரும்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் தென்பகுதி அருகில் மத்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டு "அம்ருத்" திட்டத்தின் கீழ், ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபிள்யூ. நிதி நிறுவன கடனுதவியுடன் ரூ.1,259.38 கோடி செலவில், 15 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலையை கட்டி வருகிறது. இதன் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் துவங்கியது. தற்போது 70 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்த ஆலை குடிநீர் உற்பத்தியை துவங்கி, விநியோகிக்க துவங்கினால் சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, பல்லாவரம், பரங்கிமலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்போதும் குடிநீர் தட்டுப்பாடு வராத வகையில் 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் 3 வது ஆலையும் 6,078 கோடி ரூபாய் செலவில் முதல் ஆலையின் வடபகுதியில் அமைக்கப்பட உள்ளது.

இரண்டாவது ஆலையின் நிறைவு கட்ட பணிகளான கடல்நீரை உள்வாங்கும் கட்டுமான அமைப்புகள், உவர்நீரை கடலுக்குள் அனுப்பும் நீர் உந்து நிலையம், உயர் அழுத்த மின் நிலையம், பாதுகாப்பு அறைகள், தரக் கட்டுப்பாட்டு அறை, ஆய்வுக்கூடம் போன்ற பணிகள் முடிய இன்னும் 6 மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்று மற்ற மாநிலங்களில் செயல்படுத்தும் நோக்குடன், முதல் ஆலையின் உற்பத்தி பகுதியை மத்திய நீர்வளங்கள் மீதான ஒருங்கிணைப்பு குழு மக்களவை உறுப்பினர்கள் சஞ்சய் ஜெய்சுவால், விஜய்பகல், சந்திர பிரகாஷ் சவுத்ரி, குமன்சிங், ஜெயக்குமார், தனுஷ் எம்.குமார், சுனில்குமார், குருவ கோரண்ட்லா மாதவ், நிகல்சந்த், காஸ்முக்பாய் சோமாபாய் பட்டேல், சர்தார் பல்விந்தர்சிங் பூந்தர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் விஜயராஜ்குமார், செயல் இயக்குனர் ஆகாஷ், பொறியியல் இயக்குனர் மதுரைநாயகம், தலைமை பொறியாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் ஆலையின் உற்பத்தி, விநியோகம், செயல்பாடுகள், நடைமுறைகள் பற்றி குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்