பெருகிவரும் 'பாஸ்ட்- புட்' உணவகங்கள்-ஆரோக்கியத்திற்கு ஆபத்தா? பொதுமக்கள், டாக்டர் கருத்து

உணவு பட்டியலை பார்த்தாலே நாவில் எச்சில் சுரந்துவிடுகிறது. எக் காளான், வெஜ் பிரைடு ரைஸ், எக் பிரைடு ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், காலி பிளவர் பிரை, சிக்கன் பிரைடு ரைஸ், காளான் நூடுல்ஸ், கொத்து பரோட்டா, கொத்து கறி, சிக்கன் கிரேவி போன்றவை தயாரிக்கும் பாஸ்ட் புட் கடைகளில் இளைஞர்கள் பட்டாளத்தைதான் எப்போதும் காணமுடிகிறது.

Update: 2023-03-22 18:50 GMT

துரித உணவு

இவற்றை துரித உணவு (பாஸ்ட் புட்) என்றும், அந்தக் ஓட்டல்களை துரித உணவகங்கள் என்றும் அழைக்கிறார்கள். புதுக்கோட்டை முழுவதும் புற்றீசல் போல் காணப்படும் இந்த வகை கடைகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பரபரப்பாக ஆர்டர் கொடுப்பதும், நட்சத்திர ஓட்டல் போன்று காத்திருக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் ஆர்டர் கொடுத்த அடுத்த வினாடி, உணவு சூடாகவும், சுவையாகவும், மணமாகவும் பரிமாறப்படுகின்றன.

இந்த உணவகத்திற்கு அதிக மவுசு ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்தவகை உணவுகள் எந்த அளவுக்கு சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றன என்பன குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

சுவையாக உள்ளது

புதுக்கோட்டை லெட்சுமி நகரை சேர்ந்த பள்ளி மாணவி மதிவதனி:- நூடுல்ஸ், பிரைடு ரைஸ், எக் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக உள்ளது. மேலும் இந்த உணவுகளின் நிறம் மற்றும் மணம் சாப்பிட தூண்டுவதாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இதுபோன்ற உணவுகளை சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் விளம்பரத்திற்கு வருவதால் அவர்களை போல் நாமும் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. அதேபோல் சில பிரபல ஓட்டல்களின் அமைப்பும், அதை நாம் சாப்பிடுவதற்காக கொண்டு வரும் விதமும், ஈர்க்க கூடியதாக உள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

விராலிமலை தாலுகா, அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கரு.மணி:- உணவே மருந்து, மருந்தே உணவு என்று முன்னோர் கூறியதை போலவே வாழ்ந்து வந்த காலங்களில் நம் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. சாலையோர உணவுகளை எப்போது உட்கொள்ள ஆரம்பித்தமோ அன்று முதல் உடல் சாக்கடையாக மாறிவிட்டது. நூடுல்ஸ் தயாரிப்பதற்கு 7 முதல் 8 வகையான வேதியியல் பொருட்களை கலக்கின்றன. இவை அனைத்தும் உடலுக்கு தீங்கு விளைவிப்பவையாகும். நாம் உண்ணும் நூடுல்சில் வாக்ஸ் என்ற வேதியியல் பொருள் உள்ளது. அது நம் உடலை விட்டு நீங்க 3 மாத காலங்கள் ஆகும். இது மேலும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்புற்றுநோய், இதய கோளாறு, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், நுரையீரல் பிரச்சினைகள், தோல் நோய்கள், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு வித நோய்களை ஏற்படுத்துகிறது.

அயல்நாட்டு கலாசாரம்

மச்சுவாடியை சேர்ந்த அஸ்வின் ரகுநாதன்:- இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு போன்று ஒரே மாதிரியாக சாப்பிட்டு பழக்கப்பட்ட எங்களுக்கு இதுபோன்ற துரித உணவு பிடித்துள்ளது. நூடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்றவை உலக அளவில் பல நாடுகளில் சாப்பிடப்படும் உணவாக உள்ளது. அயல்நாட்டு கலாசாரம் இந்தியாவில் பரவிவரும் இந்த வேலையில் இதுபோன்று உணவுகளை சாப்பிடுவதில் என்ன தவறு உள்ளது. அவசர உலகில் உடனடியாக தயாரித்து சுடசுட கொடுக்கும் துரித உணவு சுவையாகவே உள்ளன.

ரசாயன பொருட்கள்

கீரனூரை சேர்ந்த செல்வம்:- துரித உணவுகள் ஆபத்தானவை என தெரிந்தும் பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்கள் வரை சாப்பிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவில் ருசிக்காக அஜினோமோட்டோ மற்றும் சில ரசாயன பொருட்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், ருசி காரணமாக மாலை நேரங்களில் கடை எங்கே இருக்கிறது என தேடி சென்று இளைஞர்கள் இதனை சாப்பிட்டு வருகிறார்கள். நூடுல்ஸ் உடைந்து விடாமல் நீளமாக இருப்பதற்காக மெழுகு என்ற ஒருவகை ரசாயன பொருள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு வகையான நோய்கள் உருவாகும். எனவே ஆபத்தை உணர்ந்து இதனை தவிர்க்க வேண்டும்.

குறைந்த விலைக்கு விற்பனை

அரிமளம் ஒன்றியம் திருவாக்குடி ஊராட்சி அரசூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா:- துரித உணவுகள் ஆர்டர் செய்த ஒரு நிமிடத்தில் நம் கைகளுக்கு சுடச்சுட வந்து விடுகிறது. பரபரப்பாக இயங்கும் இந்த காலகட்டத்தில் அவசர அவசரமாக ஏதாவது ஒன்றை வயிற்றுக்குள் அள்ளிப்போட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் துரித உணவை விரும்புகின்றனர். நாகரீக வளர்ச்சி, மேலைநாட்டு மோகம் இவற்றால் துரித உணவுகளை இளைஞர்கள் விரும்புகின்றனர். மேலும் துரித உணவில் சேர்க்கப்படும் முட்டை, இறைச்சி ஆகியவற்றால் அசைவ உணவு சாப்பிடுகிறோம் என்று திருப்தியும் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் குறைந்த விலையில் சாலையோர கடைகளில் குறைந்த விலையில் இந்த உணவுகள் விற்கப்படுவதால் சுவைக்கு தேவையான பல்வேறுவிதமான பொருட்கள் பயன்படுத்துவதாலும் இளைஞர்கள் துரித உணவை விரும்புகின்றனர். சிறுதானிய உணவுகள் பற்றியும், பாரம்பரிய உணவுகள் பற்றியும் நமது முன்னோர்கள் உணவு பழக்க வழக்கங்கள் பற்றியும் நம்முடைய குழந்தைகளுக்கு எடுத்து கூறாமல் இருப்பது மிக முக்கிய காரணம். சிறுதானிய உணவுகளில் கிடைக்க கூடிய சத்துக்கள் சிறுதானிய உணவுகள் மூலம் நம் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து குழந்தைகள் வளரும் போது எடுத்துக் கூறினால் வருங்காலங்களில் இளைஞர்கள் துரித உணவை விரும்ப மாட்டார்கள்.

தரமான உணவு

பாஸ்ட் புட் கடை நடத்தி வரும் புதுக்கோட்டையை சேர்ந்த ராஜையா:- எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ருசியான, தரமான உணவுகளை நியாயமான விலைகளில் வழங்குகிறோம். அதேநேரம் அஜினோமோட்டோ, வேதியியல் பொருட்கள் மற்றும் கலர் பொருட்களை உணவுகளில் பயன்படுத்துவதில்லை. இதனால் இங்கு உணவு உட்கொள்பவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படுவதில்லை. தரமான உணவு பொருட்களைத்தான் விற்பனை செய்கிறோம்.

அஜீரண கோளாறு

புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்:- துரித உணவுகளை சாப்பிடுவதால் நன் உடம்பிற்கு தேவையில்லாத பொருட்கள் உடம்பில் சேருகிறது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் உடல் எடை கூடுகிறது. மேலும் துரித உணவில் செயற்கை மற்றும் ரசாயனம் கலந்து பொருட்களை சேர்ப்பதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. இதனால் அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் சிறுநீர் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் சாலையோரம் விற்கப்படும் துரித உணவு நிலையங்கள் அசுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது.

திடீர் சோதனை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி:- சாலையோர பாஸ்ட் புட் கடைகளில், இறைச்சி வகைகளை, மது அருந்துபவர்கள் வாங்குகின்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவு வகைகளை உட்கொள்பவர்களுக்கு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பு ஏற்படுவதாக புகார்களும் வருகின்றன. இதனால் சாலையோர உணவகங்கள், ஓட்டல்களில் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகிறோம். உணவு பொருட்கள் மாதிரியும் எடுக்கப்படுகிறது. கெட்டுப்போன இறைச்சிகள், மீன்கள் போன்ற உணவுகளை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு கெடுதல் இல்லாமல் தரமான உணவுகளை தயாரித்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த பாஸ்ட் புட் கடை

இத்தாலியின் நாபொலி நகரில் இருந்து, 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது, பாம்பெயி நகரம். கி.பி. 79-ல் வெசுவியஸ் மலையில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தில், அந்த நகரம் மூழ்கியது. மண்ணுக்குள் அது புதைந்தபோது, அங்கு சுமார் 15 ஆயிரம் பேர் வசித்துள்ளனர். இந்த நகரை, பல ஆண்டுகளாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு பாஸ்ட் புட் கடை ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.

'டெர்மோபோலியம்' என்று அழைக்கப்பட்ட இந்த பாஸ்ட் புட் கடையில், சுடுமண் அடுப்பில் சமைத்து, மக்களுக்கு சூடான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடையில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கூஜாவில், எரிமலை ஏற்பட்ட தினத்தில் கடை உரிமையாளர் வைத்திருந்த உணவுகளை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களில், பன்றிக்கறி, மீன், மாட்டிறைச்சி, நத்தை சமையலில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. உணவுகளை ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் அனுப்பி உள்ளனர். கடையில் என்னென்ன உணவுகள் விற்பனை செய்யப்பட்டது என்பதும், சூடான உணவுகளை அங்கு விற்பனை செய்ததும், அங்கிருந்த ஓவியங்கள் மூலம் தெரியவருகின்றன. கடையின் முன்பக்கம் அலங்கரிக்கப்பட்டு, கோழி, வாத்து உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டுள்ளன. ரோம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இயங்கிய இந்த உணவகம், வழிப்போக்கர்களுக்காக செயல்பட்டிருக்கும், இந்த பாஸ்ட் புட் கடையை, மக்கள் கண்டுகளிக்கும் வகையில் திறந்துவிடவும் திட்டமிட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர். மைதா வகை உணவுகளில் அதிகளவு 'கிளைசெமிக் இன்டெஸ்' என்ற பொருள் இருப்பதால், இதனை அதிகம் எடுத்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன், இதய கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை என்பதால் மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகும். மைதா உணவுகளில் ஏராளமான ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் இருப்பதால் இவற்றை உட்கொள்ளும் போது செரிமான கோளாறு ஏற்படும். இதனை தவிர்த்து கோதுமை உணவுகளை அதிகளவில் சேர்த்து கொள்ளலாம். இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இதய கோளாறு, ரத்த குழாய் அடைப்பு போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மைதா உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது என்பதால் இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்