ராணுவ பணிகளுக்கான ஊக்குவிக்கும் முகாம்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மே மாதத்தில் இந்திய ராணுவ பணிகளுக்கான ஊக்குவிக்கும் முகாம் நடத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய ராணுவ பணிகளுக்கான ஊக்குவிப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், முன்னாள் படைவீரர் நலத் துறை அலுவலர், கல்லூரி என்.சி.சி பேராசிரியர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஊக்குவிக்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றிட விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.