வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணம் இன்றி கல்வி சான்றிதழ்கள் பெற ஏற்பாடு - உயர்கல்வித்துறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.

Update: 2023-12-23 12:28 GMT

நெல்லை,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் மழை நின்ற பின்னர் பல்வேறு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடியத்தொடங்கியது. இந்த வெள்ள பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் அவர்களது உடைமைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.

மழை வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மாணவ -மாணவிகள் கல்வி சான்றிதழ்களை இழந்தனர். இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவ -மாணவிகள் இணையதளம் மூலமாக சான்றிதழ்களை கட்டணமின்றி பெற உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெற்றுகொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மேல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்