ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதம்:தாசில்தாரை பணிநீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்பணி வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகள் சேதமடைய காரணமான தாசில்தாரை பணி நீக்கம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அரசு ஊழியர்கள் தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-14 18:45 GMT

தனி தாசில்தார் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா ரிஷிவந்தியம் காலனி பகுதியில் பொது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகளை இடித்து அகற்றினர். மேலும் பட்டாவுடன் உள்ள 3 பேர் வீடுகளிலும் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

அப்போது அந்த 3 பேரின் வீடுகள் இடிந்து சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பட்டா வீடுகள் சேதமடைய காரணமான வருவாய்த்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 12-ந்தேதி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது பாதிக்கப்பட்ட ரிஷிவந்தியம் காலனி மக்கள் தங்களது குடும்பத்தினருடன் நேற்று மாலை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் பட்டா வீடுகளை இடிக்க காரணமான வருவாய்த்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தங்களது கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.

அரசு ஊழியர்கள் தர்ணா

இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் காதர் அலி தலைமையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் தனி தாசில்தார் மனோஜ் முனியனின் பணியிடைநீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவருக்கு பணி வழங்கக்கோரி திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர்.

அப்போது அரசு ஊழியர்கள் சென்னை கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றிய தனிதாசில்தாரை பணியிடை நீக்கம் செய்தது தவறானது. அவருடைய பணியிடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த போட்டி போராட்டங்களால் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்