கொப்பரை தேங்காய் கொள்முதல் பதிவை நீட்டிக்க பரிந்துரை-கோவை வேளாண் விற்பனை குழு அதிகாரி தகவல்
கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு பதிவு செய்ய வேண்டிய தேதியை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கோவை விற்பனை குழு அதிகாரி தெரிவித்தார்.;
பொள்ளாச்சி
கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு பதிவு செய்ய வேண்டிய தேதியை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கோவை விற்பனை குழு அதிகாரி தெரிவித்தார்.
கொப்பரை தேங்காய்
கடந்த ஆண்டு பெய்த பருவ மழைகளின் காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது. இதை கட்டுப்படுத்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, செஞ்சேரிமலை, நெகமம், கிணத்துக்கடவு, அன்னூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.
கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதியுடன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான காலம் நிறைவடைந்தது. இதனால் வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததால் மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மீண்டும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
பதிவு தேதி முடிந்தது
இந்த நிலையில் திடீரென்று கடந்த 15 நாட்களுக்கு முன் நேற்று (30-ந்தேதி) தான் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு பதிவு செய்ய கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்வதற்கு விவசாயிகள் ஆவணங்களை கொடுத்தனர். பொள்ளாச்சியில் மட்டும் சுமார் 600 விவசாயிகள் வரை பதிவு செய்ய ஆவணங்கள் கொடுத்து உள்ளனர். இதற்கிடையில் இணையதள பிரச்சினை காரணமாக அனைத்து ஆவணங்களையும் செயலில் பதிவேற்றம் செய்வதற்கு தாமதமாகுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருகிற 31-ந்தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் பதிவு தேதி முடிவடைந்ததால், பதிவு செய்யாத விவசாயிகளால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கொள்முதல் பதிவு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் சாவித்திரி கூறியதாவது:-
அரசுக்கு பரிந்துரை
கொப்பரை தேங்காய் கொள்முதல் நீட்டிக்ப்பட்ட காலத்தில் 2200 விவசாயிகளிடம் இருந்து ரூ.30 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. தென்னை விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை வருகிற 31-ந்தேதி வரை அரசிடம் விற்று பயனடையலாம். இதற்கு இன்றுக்குள் (நேற்று) விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகமாக உள்ளதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பதிவு செய்யும் காலத்தை வருகிற 31-ந்தேதி நீட்டிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், மாநில வேளாண் விற்பனை வாரிய தலைமை செயல் அலுவலர் ஆகியோருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.