10 பொதுக்கழிப்பிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசுக்கு பரிந்துரை

ஊட்டியில், மோசமான நிலையில் உள்ள 10 பொதுக்கழிப்பிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் பேசினார்.

Update: 2023-08-30 19:30 GMT

ஊட்டி

ஊட்டியில், மோசமான நிலையில் உள்ள 10 பொதுக்கழிப்பிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் பேசினார்.

நகராட்சி கூட்டம்

ஊட்டியில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஏகராஜ், என்ஜீனியர் சேர்மக்கனி, நகர் நல அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் கலந்து கொண்டு பேசியதாவது:-

முஸ்தபா: உழவர் சந்தை பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அமைத்திருந்த கடையை நகராட்சி அலுவலர்கள் மூடியுள்ளனர். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வங்கியில் கடன் பெற்று கடை நடத்தி வந்தனர். தற்போது வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகின்றனர். ஆனால் அந்த கடையின் அருகில் அனுமதியே வாங்காமல் புதிதாக வணிக வளாகம் திறக்கப்பட்டு உள்ளது.

ஆணையாளர்: வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ள இடம் உழவர் சந்தைக்கு சொந்தமானது. வேளாண் பொறியியல் துறை மூலம் அனுமதிக்காக விண்ணப்பித்து உள்ளனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழியர்கள்

கீதா: நகரில் பொது கழிப்பிடங்கள் மோசமாக இருப்பதால் அவற்றை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்.

ஆணையாளர்: 10 பொதுகழிப்பிடங்களை இடித்து புதிதாக கட்ட அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு உள்ளது.

துணை தலைவர் ரவிகுமார்: நகராட்சியில் உள்ள பல துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் தனியார் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே தனியாருக்கு பதிலாக நகராட்சியில் போதுமான ஊழியர்களை விரைவில் நியமிக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஒப்புதலுக்காக வைக்கப்பட்ட 32 தீர்மானங்களில் 3 தீர்மானங்கள் தவிர மற்ற 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்