திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.;

Update:2025-12-05 11:01 IST


உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது.

இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.

அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் (காணொலி) மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.

அதன்படி சற்று நேரத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார். அவரிடம் நீதிபதி, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீஸ் கமிஷனர், “திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.

தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நாளை(அதாவது இன்று) நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் விசாரணை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் தொடங்கி நடைபெற்றது. அப்போது மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. இந்த சூழலில் நேற்றைய உத்தரவு நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. CISF படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும், ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்