ஜெயலலிதாவின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் - செங்கோட்டையன் புகழஞ்சலி
தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.;
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த வாரம் இணைந்தார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகளை விஜய் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கோபி அருகே கரட்டூரில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டது. இது அதிமுகவினர் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தனது அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.