உறவினர்கள் அரசியல் கட்சியினர் சாலை மறியல்

பிளஸ்-2 மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரி அவரது உறவினர்களும், அரசியல் கட்சியினரும் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-07-16 18:02 GMT

கள்ளக்குறிச்சி

பிளஸ்-2 மாணவி சாவு

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உடலைவாங்க மறுப்பு

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து நான்குமுனை சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சாலையின் குறுக்கே தடுப்பு கட்டைகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்புகளை எல்லாம் மீறி 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அமைச்சர் ஆறுதல்

இதற்கிடையே தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மாணவி ஸ்ரீமதியின் வீட்டிற்கு சென்று, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்துவதாக கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார். அப்போது மாணவியின் தாய் செல்வி, தங்களுக்கு நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும், தான் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும், எனவே எனக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர் சி.வெ.கணேசன், முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று வேலை வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.

முன்னதாக கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், மாணவியின் இறப்பு குறித்து பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று, மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தொல்.திருமாவளவன் நிதிஉதவி

நேற்று முன்தினம் இரவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.25 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்