விருத்தாசலத்தில் நவீன எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் ஆபரேட்டர்கள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு

விருத்தாசலத்தில் நவீன எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அப்போது ஆபரேட்டர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-15 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகளை அகற்றும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று தாசில்தார் தனபதி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 3 நவீன ரக எந்திரங்கள் வரவைக்கப்பட்டு சாலையின் இரு பக்கங்களிலும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வணிக வளாக கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

கற்களை வீசி தாக்குதல்

இந்த நிலையில் நேற்று மாலையில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் திடீரென, ஆக்கிரமிப்புகளை அகற்றும் வாகனங்களின் ஆபரேட்டர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆபரேட்டர்கள் வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மீண்டும் இதுபோல சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தனர்.

பரபரப்பு

இந்த நிலையில் அங்கு திரண்டு வந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்