ஊர் பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரிகிராம மக்கள் சாலை மறியல்போலீசார் பேச்சுவார்த்தை

Update: 2023-04-23 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே ஊர் பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏரிகள், ஏராளமான தென்னை மரங்கள், கோவிலுக்கு சொந்தமான சில ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றை ஊர் பொது ஏலம் விடுவதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்காண பணம் வருவாய் கிடைக்கிறது. இந்த பணம் வங்கி கணக்கில் வைத்து வரவு, செலவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவில் பூஜை செலவு மற்றும் விழாக்கால செலவு என கூறி போலி கணக்கு எழுதி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் ஏரியில் மண் விற்ற பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

பேச்சுவார்த்தை

இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று காவேரிப்பட்டணத்தில் உள்ள தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள போத்தாபுரம் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்துவார் என கூறியதையடுத்து சமாதானம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்