மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.61½ லட்சம் மோசடி - 3 பேர் கைது

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-27 12:28 GMT

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் சுலோச்சனா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 66). இவர், தனது மகன், மகள் மற்றும் உறவினர்கள் 2 பேர் என 4 பேருக்கும் அரசு வேலை தேடி வந்தார். அப்போது சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (55), குன்றத்தூரைச் சேர்ந்த சக்திவேல் (49), சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த விஷ்வேஷ்வரன் (32) ஆகிய 3 பேரும் மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

இதற்காக அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் ரூ.13 லட்சம் வரை செலுத்தினார். ஆனால் அவர்கள் 3 பேரும் மின்வாரிய அலுவலகத்தில் வேலை கிடைத்ததாக போலி நியமன ஆணையை கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன், இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சதீஷ், சக்திவேல், விஸ்வேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மோகன் உள்பட 10 பேரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சத்து 50 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் கைதான 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கடந்த 2008-ம் ஆண்டில் விஷ்வேஷ்வரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இதே மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், அதன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்