ரூ.3¾ கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சேலத்தில் 15 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ரூ.3¾ கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Update: 2022-12-04 20:32 GMT

சேலத்தில் 15 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ரூ.3¾ கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

புத்தக கண்காட்சி

பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் கடந்த மாதம் 20-ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி 11 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் புத்தக வாசிப்பாளர்கள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. மொத்தம் 15 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடைபெற்றது. புத்தக கண்காட்சி நடைபெற்ற 15 நாட்களும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பட்டி மன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு நாளான நேற்று மாணவ, மாணவிகள், கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 'துன்பம் மறந்திடு' என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டி மன்றம் நடைபெற்றது. இதில் கவிஞர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

நிறைவு விழா

பின்னர் இரவில் கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து நன்கொடையாளர், கண்காட்சி ஏற்பாடு செய்தவர்கள் உள்ளிட்ட பலருக்கு அவர் நினைவு பரிசுகளை வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், 15 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் ரூ.3¾ கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளன. இதில் அதிக அளவில் சரித்திர நாவல்களை புத்தக வாசிப்பாளர்கள் வாங்கிச்சென்று உள்ளனர். கண்காட்சியை 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு உள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்