மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம்: இருதரப்பினரிடையே மோதல்; ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்ற தலைவர், அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-18 18:45 GMT


செஞ்சி, 

வீடியோ வைரல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் செஞ்சியில் உள்ள அரசு அலுவலகங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மாலை காரில் வந்த சுவரொட்டி ஒட்டிய மீனம்பூரை சேர்ந்த நபர்களை ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் மகன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மோதல்

இதனிடையே சுவரொட்டி ஒட்டிய சஜித் உள்ளிட்ட நபர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சஜித் தரப்பை சேர்ந்த அப்ரர் கொடுத்த புகாரின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர், அவரது சகோதரர் அக்தர், ஊராட்சி மன்ற தலைவரின் மகன்கள் லியாகத், அஸ்கர் உள்பட 22 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் (வயது 62) அவரது மகன் லியாகத் (27) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சிகிச்சை

ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த சஜித், அஸ்லம், உமர், ஆதம் அப்ரார் ஆகிய 5 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதனிடையே கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், போலீசார் அவரை செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்