10¾ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 10.76 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-25 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 10.76 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும்பணி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி எள்ளுக்குழி - சிவப்பு சந்தன மரத்தோட்ட பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலை, சாதாரண மழைப்பொழிவு முறைகளை பாதுகாப்பதிலும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் தற்போது 23.80 சதவீத நிலப்பரப்பில் உள்ள காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் பசுமை தமிழகம் இயக்கத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்காலிக இலக்கு

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பசுமை பரப்பு இருக்கின்றது என்றாலும், இதை மென்மேலும், உயர்த்தி அதிக பசுமை பரப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் 10.76 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய திட்டமிடப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மேலும் அடுத்த 2023-2024-ம் ஆண்டில் சுமார் 19 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக தற்காலிக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மாவட்ட அளவில் பல துறைகளை ஒருங்கிணைத்து, மக்களின் பங்களிப்பு, பொது, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் பல இன மரக்கன்றுகள் நடவு செய்து இந்த திட்டத்தின் இலக்கை எய்திட மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழாவில் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி, வனச்சரக அலுவலர் அருண் பிரசாத், மாவட்ட கவுன்சிலர் குமார், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கந்தம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி மற்றும் வனச்சரக அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்