சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-25 16:52 GMT

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சாட்சிகள் ஆஜராகி தங்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு சாத்தான்குளம் வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.

ஆனால் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க முடியவில்லை. விசாரணையை முடிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, விசாரணையை முடிக்க 5 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், செல்வராணி மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், "வழக்கில் 105 சாட்சிகள் உள்ளனர். இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், இதுவரை எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும்? விசாரணையை முடிக்க எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்