தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

Update: 2022-08-25 07:53 GMT

சென்னையில், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சியால் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் இருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், அதனை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னையில் கடந்த 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 8 ஆயிரத்து 777 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 823 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 2 ஆயிரத்து 951 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அபராதமாக ரூ.10 லட்சத்து 10 ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்