தூத்துக்குடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்ஆற்றல் சிக்கனம், தணிக்கை முறை கருத்தரங்கு

தூத்துக்குடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்ஆற்றல் சிக்கனம், தணிக்கை முறை கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-02-16 18:45 GMT

தூத்துக்குடியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஆற்றல் சிக்கனம் மற்றும் தணிக்கை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் வணிகர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஆற்றல் சிக்கனம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பணிகளுக்காக செய்யும் செலவினங்களில் மிகப்பெரிய தொகை ஆற்றல் பயன்பாட்டுக்காகவே செலவிடப்படுகிறது. உற்பத்தி செலவுகளை குறைத்து அதிகப்படியான லாபம் ஈட்டுவதன் மூலம் மட்டுமே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வியாபார போட்டிகளை சந்தித்து சந்தையில் நிலைத்து நிற்க முடியும். இதனை உணர்ந்த தமிழக அரசு தொழில் நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பை உறுதி செய்யும் வகையில் நிறுவனங்களுக்கு ஆற்றல் சிக்கனத்தையும், அதற்கான தணிக்கை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கி, நிறுவனங்களை தணிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, தணிக்கை கட்டணத்தில் 75 சதவீதம் (அதிகபட்சம் ரூ.1 லட்சம்) மானியமாக வழங்கவும், தணிக்கையாளர் பரிந்துரையை ஏற்று ஆற்றல் சேமிப்புக்காக கூடுதல் எந்திரங்களை நிறுவினால், அதற்கான முதலீட்டில் 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10 லட்சம்) மானியமாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது.

கருத்தரங்கம்

அதன்படி தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் இணைந்து ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும் திட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்குக்கு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் ஜி.அகிலா வரவேற்று பேசினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், நிறுவனங்களில் எவ்வாறு ஆற்றல் தணிக்கை மேற்கொள்வது, அரசிடம் இருந்து எவ்வாறு மானியங்கள் பெறுவது போன்றவை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் எஸ்.சிவக்குமார், பி.திலீபன் ஆகியோர் விளக்கி பேசினர்.

கருத்தரங்கில் சங்க நிர்வாகிகள், வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்