"அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள்"
அ.தி.மு.க.வை அனுப்பியது போன்று பா.ஜ.க.வையும் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.;
கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஷ்ரவன்குமார் வரவேற்றார்.
விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 15 ஆயிரத்து 495 பேருக்கு 110 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரத்து 916 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும் 19 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டபட்பட்ட 6 துறைகளுக்கான 57 புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
260-க்கும் மேற்பட்ட திட்டங்கள்
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை என்கிற திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்துக்கு எதிராக சிலர் திட்டமிட்டு வீண் வதந்தியை பரப்புகிறார்கள். அதை யாரும் நம்பாதீர்கள். இது உங்களுக்கான திட்டம், மகளிர் வாழ்வில் ஒளியேற்ற வந்த திட்டம்.
கடந்த 26 மாதங்களில் 260-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். 2 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்குரிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி சாதனை செய்துள்ளார்.
வாணாபுரம் தாலுகா தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடி மதிப்பில் விரைவில் அமைய உள்ளது. அதற்கான இடம் கண்டறியப்பட்டு முதற்கட்ட பணியை தொடங்கி உள்ளோம். மேலும் வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு ரூ.7½ கோடி செலவில் புதிய தாலுகாவை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொற்கிழி வழங்கல்
இதை தொடர்ந்து, தி.மு.க. சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாடூரில் நடைபெற்றது. அங்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் 50 அடி உயரம் கொண்ட ரோஜா பூ மாலை கிரேன் மூலம் அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கட்சியின் மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் பணம் முடிப்புவுடன் கூடிய பொற்கிழியை வழங்கி பேசினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி பேசுகையில், நான் இன்று எத்தனையோ நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி என்பது கூடுதல் சிறப்பாகும். இதை எண்ணி நான் பெருமை அடைகிறேன்.
பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்புங்கள்
எப்படியாவது குறுக்கு வழியில் உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எப்போதுமே தமிழ்நாட்டு மக்கள், தமிழகத்தில் பா.ஜ.க. காலடி எடுத்து வைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது உங்களின் வாயிலாக எனக்கு தெரிகிறது.
2021 தேர்தலில் அ.தி.மு.க.வை எப்படி வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்களோ, அதேபோல் பா.ஜ.க.வையும் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சியை பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியாக நான் பார்க்கவில்லை. ஒரு பேரன் தாத்தா பாட்டிக்கு செய்கிற கடமையாகத்தான் இதை பார்க்கிறேன் என்றார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏ.கே.டி. பள்ளி கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டம் குறித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது, வேலைவாய்ப்பு, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார். இதில் புதுமைப்பெண் திட்டத்துக்கு விண்ணப்பித்து இதுவரையில் உதவித்தொகை கிடைக்காமல் இருப்பவர்கள் குறித்து கேட்டறிந்து, கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பின்னர் சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 10 மாணவர்களுக்கு திறன் பயிற்சிக்கான சான்றிதழை வழங்கினார்.
அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்
இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அனைவருக்கும் எல்லாமும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு. கலைஞரின் நூற்றாண்டில் நாம் செயல்படுத்தியுள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இத்திட்டத்தில் தகுதியுள்ள எந்தவொரு பயனாளியையும் விட்டுவிடாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம்.கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), உதயசூரியன் (சங்கராபுரம்) மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் கலந்து கொண்டனர்.