போடியில் விடுதி உரிமையாளர் கொலை; துணை நடிகர் உள்பட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்

போடியில் விடுதி உரிமையாளர் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நடிகர் உள்பட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2022-08-02 16:46 GMT

போடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68). முன்னாள் ராணுவ வீரரான இவர், தங்கும் விடுதி நடத்தி வந்தார். கடந்த 30-ந்தேதி இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போடி டவுன் மற்றும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், போடி திருமலாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (45), மதன்குமார் (43), சுரேஷ்குமார் (44), மனோஜ்குமார் (21), திருப்பூரை சேர்ந்த யுவராஜ் (20), போடியை அடுத்த கரையான்பட்டியை சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் சேர்ந்து ராதாகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் கொலைக்கான காரணம் குறித்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான 6 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்ராயன் கோவில் எதிரே ராதாகிருஷ்ணனுக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தை மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் வாடகைக்கு எடுத்து, அதில் செங்கல்சூளை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வரவு-செலவு தொடர்பாக ராதாகிருஷ்ணன் மற்றும் மாரிமுத்து, மனோகரன் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் தங்களது நண்பர்களான மதன்குமார், சுரேஷ்குமார், மனோஜ்குமார், யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து ராதாகிருஷ்ணனை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், கைது செய்யப்பட்ட மனோகரன் துணை நடிகர் ஆவார். இவர் நடித்துள்ள 'விருமன்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்