கம்பத்தில் கடை, ஓட்டல்களில் சோதனை:உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் வியாபாரி வாக்குவாதம்

கம்பத்தில் கடை, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-10-03 18:45 GMT

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

கம்பம் பகுதிகளில் உள்ள கடை, ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், மதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உள்ள குளிர்சாதன பெட்டிகளில் சோதனை செய்தனர். அதில் சுகாதாரம் இல்லாமல் இருந்த இறைச்சி மற்றும் காலாவதியான பால் உள்ளிட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோல் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள பழக்கடை குடோனில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனை செய்யவிடாமல் அதிகாரிகளுடன் கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடைகளுக்கு சீல்

தகவல் அறிந்ததும் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வைத்திருந்த அழுகிய பழங்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறுகையில், ஓட்டல்களில் பழைய இறைச்சி மற்றும் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்தப்படும்போது விஷமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தரமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்