ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

Update: 2023-02-11 03:36 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது.

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளதால், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின்படி, 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 180 வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்