பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.;
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும். அதன்படி கடந்த 18-ந் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது.
கடந்த 25-ந் தேதி புரட்டாசி முதலாவது சனிக்கிழமையன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி கோவை மாநகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நேற்று பெருமாளுக்கு பிடித்த துளசி மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திருமஞ்சனம், திருக்காப்பு சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.