மத்திய அரசு மீது திரும்ப, திரும்ப அவதூறு பரப்புவதா?

மத்திய அரசு மீது தி.மு.க. திரும்ப, திரும்ப அவதூறு பரப்புவதா? என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-16 01:15 IST
கோவை


மத்திய அரசு மீது தி.மு.க. திரும்ப, திரும்ப அவதூறு பரப்புவதா? என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.


பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-


சி.ஏ.ஜி. அறிக்கை


"மத்திய பா.ஜ.க. அரசின் ஊழல்களை பற்றி பேசி விடக் கூடாது என்பதற்காகவே, சனாதனத்தை பற்றி பேசி பா.ஜ.க. திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. எனவே, தி.மு.க.வினரும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், பா.ஜ.க.வின் தந்திரத்திற்கு இடமளித்து விடக்கூடாது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சிக்கு மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளுக்கும் அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார்.


கணக்கு தணிக்கை துறை தலைவரின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு திட்ட மிடப்பட்டதை விட அதிக செலவு செய்யப்பட்டது என சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதைதான் ஊழல் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.


குற்றச்சாட்டு கூற முடிய வில்லை


மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், திட்டங்களை செயல்படுத்தும்போது அதில் மாற்றங்கள் இருக்கும். பல நேரங்களில் சிறிய திட்டம், பெரிய திட்டமாக விரிவாக்கப் படலாம். அதனால், திட்டமிட்டதை விட அதிக செலவாகும். இதை சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டும். இது வழக்கமான ஒன்று தான்.


பா.ஜ.க. அரசு மீது எதிர்க்கட்சிகளால் எந்தவொரு ஊழல் குற்றச் சாட்டையும் கூற முடியவில்லை. அதனால், சி.ஏ.ஜி அறிக்கையை காரணம் காட்டி ஊழல் என திரும்ப திரும்ப கூறி வருகின்றனர்.


வழக்கு தொடரலாமே?


ஊழல் நடந்திருந்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது ஊழல் என பேசுவது அவர்களிடம் உண்மையும், நேர்மையும் இல்லை என்பதையும், பா.ஜ.க. அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் ஏதாவது அவதூறை பரப்ப வேண்டும் என்ற தீய உள்நோக்கம் இருப்பதையுமே காட்டுகிறது.


மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக தனிப் பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு கனவாகவே முடியும்.


சனாதனத்தை பற்றி பேசி பா.ஜ.க. திசை திருப்ப வில்லை. தி.மு.க. அரசின் மீதான மக்களின் கோபத்தை மாற்றவே, திட்ட மிட்டு எழுதி வைத்து முதல் - அமைச்சரின் மகனும், அமைச்சரு மான உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார். உதயநிதி பேசியதற்கு தான் பா.ஜ.க. பதில் கொடுக்கிறது. அதனால் திசை திருப்ப வேண்டிய அவசியமும் பா.ஜ.க.வுக்கு இல்லை.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்