கோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளது: பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-05 15:38 GMT

கோப்புப்படம்

சென்னை,

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டு கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அதே சமயம் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களை தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்து கோவில்கள் மீது மட்டும் ஏன் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் கோவில்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சியிடம் (தி.மு.க.விடம்) கோவில்களை விடுவிக்குமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "பிரதமரின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம், இது தவறா? ரூ.3,500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எதைத் தவறு என்கிறார் பிரதமர்.. ?, பிரதமர் பார்வையில் தான் தவறு இருக்கிறது. ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் பேசுவது முறையா? தர்மமா?.. பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் தவறான, அவதூறு செய்தியை சொல்வது சரியா?" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்