கடையம்:
கடையம் அருகே உள்ள கீழஆம்பூர் மேலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). இவர் கடந்த 23-ந் தேதி தென்காசியில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோவில் நன்கொடைக்கு பிரித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கணேசன் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.