வீடு புகுந்து கல்லூரி மாணவனை தாக்கி காரில் கடத்திய மர்ம கும்பல்

பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவனை தாக்கி காரில் கடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.;

Update:2023-09-09 22:53 IST

பொங்கலூர்

பொங்கலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவனை தாக்கி காரில் கடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவன் கடத்தல்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு கோட்டைமேடு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு பூபாலன் (வயது 25), குணசேகரன் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் குணசேகரன் அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 3-ம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் குணசேகரன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. அந்த கும்பல் திடீரென்று குணசேகரனின் வீட்டினுள் புகுந்து அங்கு இருந்த குணசேகரனை தாக்கி காரில் கடத்த முயன்றது. . இதனால் குணசேகரன் கூச்சலிட்டார். இவருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது அந்த கும்பல் அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டிய தோடு குணசேகரனை குண்டுகட்டாக தூக்கி காருக்குள் போட்டனர். பின்னர் அங்கிருந்து காரை ஓட்டி செல்ல முயன்றபோது அந்த காரை குணசேகரனின் உறவினர்கள் தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் காரை பின்நோக்கி நகர்த்தியுள்ளது. அப்போது காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த 3 பேர் மீது கார் இடித்தது. இதில் அவர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர்.

போலீசில் புகார்

ஆனாலும் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் குணசேகரனை கடத்திக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆதித்தமிழர் ஜனநாயக பேரையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் மற்றும் உறவினர்கள் மாணவர் கடத்தப்பட்டது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கல்லூரி மாணவனை கடத்தி சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குணசேகரன் கல்லூரி மாணவர் என்பதால் என்ன காரணத்திற்காக இந்த கடத்தல் சம்பவம் நடந்தது அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்