கிணற்றில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி

கடையம் அருகே கிணற்றில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.;

Update:2022-10-02 00:15 IST

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் வைகுண்டராஜா. விவசாயி. இவருடைய 3-வது மகன் விஷ்ணு (வயது 8). இவன் வள்ளியம்மாள்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முதல் பள்ளி விடுமுறை என்பதால் விஷ்ணு தனது அண்ணன் ஸ்ரீமன்னுடன் மாடு மேய்ப்பதற்காக, காலை 7.30 மணியளவில் அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றான். அப்போது அங்குள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மீன்கள் துள்ளி குதித்து விளையாடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த விஷ்ணு திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவன் தண்ணீரில் மூழ்கினான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீமன் உடனே வீட்டிற்கு ஓடிச் சென்று பெற்றோரிடம் கூறினான். தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆலங்குளம் தீயணைப்பு படையினர் வந்து, கிணற்றில் விஷ்ணுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கீழப்பாவூர் கருமடையூரை சேர்ந்த 83 வயது முதியவர் முப்புடாதி வரவழைக்கப்பட்டார். அவர் கிணற்றில் குதித்து கயிறு கட்டி விஷ்ணு உடலை சிறிது நேரத்தில் மீட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணுவின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவனது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்