கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

திருக்கோவிலூர் அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2023-07-20 00:15 IST

திருக்கோவிலூர், 

சோழபாண்டியபுரத்தில் இருந்து செங்கனாங்கொல்லை வழியாக திருக்கோவிலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டு சென்றது. பள்ளி நேரம் என்பதால் அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் செங்கனாங்கொல்லை கிராமத்துக்கு வந்தது. அப்போது பஸ்சில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்ததால் செங்கனாங்கொல்லையில் பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் ஏறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அவர்கள் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த அரசு பஸ்சை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பள்ளி, கல்லூரி நேரங்களில் செங்கனாங்கொல்லை வழியாக கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்விகோபி மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதல் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அவர்கள் வேறு ஒரு பஸ்சில் ஏறி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்