கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ‘

Update: 2022-10-30 19:00 GMT

தங்க கவசத்தில் முருகர்

அரியலூர் நகரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, ஆடு, யானை, குதிரை, ரிஷப, வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சூரசம்ஹார விழாவையொட்டி தங்க கவசத்தில் பாலசுப்பிரமணியசுவமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, சக்தி சன்னதிக்கு சென்று வேலை பெற்ற முருகர் சூரனை வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாணமும், நாளை விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.

பால முருகன் கோவில்

உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் பால முருகன் கோவில் உள்ளது. கந்தசஷ்டி மகா லட்ச்சார்ச்சனை விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டி அனுக்ஞை, விக்னேஸ்வரர்பூஜை, புண்ணியாவாஜனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று ஆட்டுக்கிடா வாகனம், மூலவர் சிவ சுப்பிரமணியர் அலங்காரத்திலும், இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. 1-ந் தேதி தீர்த்த வாரி உற்சவம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நடைபெறுகிறது.

வில்லேந்தி வேலவர்

தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி வள்ளி தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு கடந்த 5 நாட்களாக பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். மாலை 6 மணியளவில் விசாலாட்சி அம்மனிடமிருந்து சக்திவேல் வாங்கும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திற்கு வெளியே அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் கஜமுகாசுரனை வதம் செய்து, பின்னர் சிங்கமுகாசுரனை வதம் செய்தார். தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்த போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா வில்லேந்தி வேலவனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பியது விண்ணைமுட்டும் வகையில் அமைந்தது. தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து முருகப்பெருமானுக்கு மங்கள இசையுடன் சோடச உபச்சாரங்கள் செய்யப்பட்டன. மங்கள ஆரத்திக்கு பின் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும், 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்