தமிழகத்திலும் தாமரை ஆட்சி மலர வேண்டும்: சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

கரூரில் நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலும் தாமரை ஆட்சி மலர வேண்டும் என சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-10-27 18:42 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக அரசை கண்டித்து நேற்று தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில் நேற்று கரூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாதபோதும் உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்கியதை விட அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் சிட்டி தந்தது தமிழகத்திற்கு மட்டும்தான். இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட் சிட்டிகளை கொண்டது தமிழகம் தான். தமிழகத்திலும் தாமரை ஆட்சி மலர வேண்டும்.

பசி என்பதே இல்லை

பா.ஜ.க. இந்த தேசத்தை ஆள வேண்டும். உலகத்தின் உச்சத்தை இந்த தேசம் பெறுகிறபோது, பாரத அன்னையினுடைய உச்சியை தொடுகிறதாக நம்முடைய தமிழ் மாநிலம் இருக்க வேண்டும். தமிழினம் உலகத்தின் முன்னோடியான இனம். அதனுடைய புகழ் இதற்குள்ளாக மட்டும் இருக்க கூடாது. உலகமெங்கும் பரவவேண்டும். திருவள்ளுவர் சிலையை உத்தரகாண்டில் அமைத்தது பா.ஜ.க.,

கங்கையையும், காவிரியையும் இணைத்திடுவோம். கரைபுரண்டோடுகிற நீர் இந்த தமிழ் தேசத்தை வளமாக்கட்டும். பசி என்பதே இந்த மண்ணில் இல்லை, பஞ்சம் பறந்தோடட்டும். எங்கும் எல்லோருக்கும் உணவு, உடை, இருப்பிடம் என்கிற உன்னதமான சமுதாயத்தை படைத்திடுவோம். பிரதமர் மோடியின் கரங்களை வலுபடுத்திடுவோம். அண்ணாமலையின் கரங்களை வலுபடுத்திடுவோம், என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி துணைத்தலைவி மீனாவினோத்குமார், கரூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்