இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2023-06-05 20:48 GMT

இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

கள ஆய்வு கூட்டம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெ) ஒன்றியத்தில் உள்ள பொதும்புவில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் திரும்பப்பெறும் களஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைத்து தர மக்களும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை எடப்பாடி பழனிசாமி நிர்ணயித்துள்ளார். ஆனால் இன்றைக்கு உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருவதால் 2½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக அ.தி.மு.க. உருவாகும் நிலை உள்ளது. ஆட்சி பொறுப்புக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் தி.மு.க தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்ட ஒழுங்கு சீர்கேடாக உள்ளது. அதேபோல் கள்ளச்சாராயத்தால் அதிகளவில் பலியான மாநிலமாக தமிழகம் உள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் அதிகரித்து உள்ளது.

அதே போல் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதாவது தமிழகம் இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. 2-வது இடத்தில் மராட்டியம் ரூ.72 ஆயிரம் கோடியும்,, மூன்றாவது இடத்தில் மேற்கு வங்காளம் ரூ.63 ஆயிரம் கோடியும் வாங்குகிறது.

மருத்துவ படிப்பு

எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரி உருவாக்கி கொடுத்து அதன் மூலம் தமிழகத்திற்கு 1,450 மருத்துவ இடங்களை புதிதாக உருவாக்கித் தந்தார். மேலும் 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் 565 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவ படிப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 3 மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் சுமார் 650 மருத்துவ இடங்கள் பறிபோய் உள்ளன. இதற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு தான் காரணம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவோம் என அந்த மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்த பின்பும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கண்டிக்காமல் மவுனமாக இருக்கிறார். விடியா தி.மு.க. அரசின் செயலால் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான முல்லைப் பெரியாறு அணை, காவிரி நீர் பறிபோகிற அவலநிலை உருவாகப் போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்