வடமதுரை அருகே கோவில் திருவிழாவையொட்டி கழுமரம் ஏறிய இளைஞர்கள்

வடமதுரை அருகே கோவில் திருவிழாவையொட்டி இளைஞர்கள் கழுமரம் ஏறினர்.

Update: 2022-07-13 16:39 GMT

வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டையில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து, கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

திருவிழாவையொட்டி இன்று கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, கோவில் அருகே 70 அடி உயரத்தில் கழுமரம் நடப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டிபோட்டு ஏறினர். ஆனால் பெரும்பாலானோர், கழுமரத்தின் உச்சியை சென்றடைய முடியாமல் பாதியிலேயே வழுக்கி கீழே வந்தனர்.

சுமார் 2 மணி நேரம் போராடி, தோப்பூரை சேர்ந்த சதீஷ் என்பவர் கழுமரத்தின் உச்சி மீது ஏறி அங்கு மஞ்சள் துணியில் கட்டி வைத்திருந்த பரிசை எடுத்தார். அவருக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பரிசு பொருட்களை வழங்கினர். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முத்தாலம்மன் பூஞ்சோலை சென்றடைவதுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்