மகா பகவதி அம்மன் கோவிலில் திருவிழா
பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் மகாபகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 24-ந் தேதி காலை நஞ்சை இடையாறு ராஜா சாமி கோவிலில் இருந்து மணிவேல் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை சாமி வெள்ளாளர் தெரு, வெங்கமேடு, பாலாஜி நகர், காவிரி நகர், நாவல் நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் ஊர் விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 25-ந் தேதி ஜேடர்பாளையம் ரோடு, மேற்கு வண்ணத்துறை ரோடு, காலேஜ் ரோடு, மகாலட்சுமி நகர், வெங்கமேடு, சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 26-ந் தேதி மாலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. 27-ந் தேதி மாலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு ஒயிலாட்டமும், வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.