தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்த சிறுவன் கைது
தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்த சிறுவன் கைது;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 40). கூலி தொழிலாளி. இவரும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனும் நேற்று அதிகாலை குஞ்சிபாளையத்தில் உள்ள மதுக்கடை பகுதிக்கு மது அருந்த சென்றனர். பின்னர் அங்கு பீர் பாட்டில்களை வாங்கி கொண்டு குடிக்க சென்றனர். போதை தலைக்கேறிய நிலையில் பிரபுவிடம் இருந்த செல்போனை அந்த சிறுவன் பறித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றவே அந்த சிறுவன் பீர் பாட்டிலால் பாலபிரபுவை தாக்கினார். பின்னர் அவரை தள்ளி விட்டு விட்டு சிறுவன் செல்போனை, மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதற்கிடையில் காயமடைந்த பாலபிரவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை போலீசார் வாகன சோதனையின் போது அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு செல்போன், மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். சிறுவனிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைதான சிறுவன், அரசு கல்லூரி விடுதியிலும் கைவரிசையை காட்டியது தெரியவந்தது.