போராட்டங்கள்... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்... கூட்டணி கட்சிகளின் நெருக்கடி - எப்படி சமாளிக்கப்போகிறது திமுக?
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக கடந்த தேர்தலைப்போலவே கூட்டணியை வலுவாக அமைத்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அனேகமாக, ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக கடந்த தேர்தலைப்போலவே கூட்டணியை வலுவாக அமைத்துள்ளது. தற்போது, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் புதிதாக கைகோர்த்துள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 4½ ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.
இது ஒரு பக்கம் நடந்து வந்தாலும், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு நிலையை சுட்டிக்காட்டியும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், தலைநகர் சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் ஒரு பக்கம் தனியார்மயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம் ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி, அரசு நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு அதை கைவிட்டனர். புத்தாண்டு தொடக்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பும் போராட்டம் அறிவித்துள்ளது.
இப்படி, பல்வேறு போராட்டங்கள் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் கூட்டணியில் உள்ள கட்சிகளும் அதிக சீட்டுகள் கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூடுதல் சீட் கேட்டால், காங்கிரஸ் கட்சியோ கூடுதலாக ஒரு படி மேலே போய் ஆட்சியிலும் பங்கு கேட்டு வருகிறது.
இப்படி பல்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் எதிர்ப்பு கணைகள் வருவதால், அதை சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது.