இளைஞர்களை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழ்நாடு போதைப்பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தரமான கல்வி, மேன்மையான ஒழுக்க நெறி, உயர்தர மருத்துவம், வேலைவாய்ப்பு, அமைதியான சூழ்நிலை ஆகியவற்றை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒரு மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இவற்றைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை போதைப் பொருட்களின் புகலிடங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து போதைப் பொருட்களின் கலாசாரம் தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. 2024-ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரிவின் அமைப்பாளர் ஒருவர் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டிற்காக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதேபோன்று, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவது குறித்த தகவல் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்ததன் அடிப்படையில் 5,970 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ஏழு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோன்ற பல்வேறு போதைப்பொருள் சம்பவங்கள் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிமைகளாகி வருகின்றனர்.
அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, திருத்தணி ரெயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்ட காவல் துறையினர் அவரை மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மேற்படி வட மாநில வாலிபரை வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் நான்கு சிறுவர்கள் இதில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நான்கு சிறுவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேமற்கொண்டதில், வட மாநில வாலிபரை அரிவாளை காட்டி மிரட்டுவது போல் ரீல்ஸ் எடுப்பதற்கு கைபேசியில் வீடியோ எடுத்ததாகவும், அதை அவர் தடுத்ததன் காரணமாக அவரை அங்கிருந்து இறக்கி, ரெயில்வே குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டியதாகவும், அதை ரீல்ஸாக வெளியிட்டோம் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தச் சிறுவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மிகுந்த பேரதிர்ச்சியை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து தமிழ்நாடு போதைப்பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல பலவிதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு" என்றிருந்த பெருமையை சீர்குலைத்து போதைக் கலாசாரமாக, கள்ளச்சாராயத்தின் இருப்பிடமாக, கஞ்சாவின் புகலிடமாக மாற்றியுள்ள தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களை அழிவிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு அறிவைப் புகட்டவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.