2-வது முறையாக மாணவியை கடத்தி சென்ற வாலிபர் வீட்டுக்கு தீ வைப்பு

பண்ருட்டி அருகே 2-வது முறையாக மாணவியை கடத்தி சென்ற வாலிபர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ‘என்னை யாரும் கடத்தவில்லை’ என்று மாணவி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.;

Update:2023-04-14 00:15 IST

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள், புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்.

கடந்த 31-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில், தொரப்பாடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மணிகண்டன் (வயது 30) என்பவர் மாணவியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

போக்சோவில் கைது

மேலும், அந்த மாணவியை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி கடத்தி சென்றதாக மணிகண்டன் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்திருந்தனர்.

தற்போது சிறையில் இருந்து வந்ததும், மீண்டும் மாணவியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக புதுப்பேட்டை போலீசார் கடத்தல் வழக்காக பதிவு செய்து மாணவியுடன் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடிவந்தனர்.

தீபிடித்து எரிந்த வீடு

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மணிகண்டனின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று, தீயை அணைத்தனர்.

இந்த நிலையில், தனது மகளை மணிகண்டன் கடத்தி சென்றுவிட்ட ஆத்திரத்தில்,மாணவியின் தந்தை தான் தனது வீட்டுக்கு தீ வைத்துவிட்டதாக மணிகண்டனின் தாய் சின்னப்பொண்ணு புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், யாரேனும் வீட்டுக்கு தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி வெளியிட்ட வீடியோ

இதற்கிடையே, கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"நான் லவ் பண்ணுறவர் பெயர் மணிகண்டன், ஓடிப்போய் கல்யாணம் செய்தோம், அதன்பின் எங்களை அழைத்து வந்து பிரித்துவிட்டார்கள். நான் எனது அம்மாவுடன் இருந்தேன். எனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை. திரும்பவும் நான் அவரு கூடவே வந்துவிட்டேன். என்னை யாரும் தேடாதிங்க. எங்களுக்கு ஏதேனும் ஆனால் அதற்கு அம்மா தான் காரணம்" என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 குழந்தைகளின் தந்தை

மாணவி வீடியோ வெளியிட்ட போதிலும், அவருக்கு 16 வயதே ஆவதால், மணிகண்டன் மீண்டும் போக்சோ வழக்கில் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுமியை கடத்திய வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்