குடியரசு தின விழாவில் கலெக்டர் கொடியேற்றினார்

பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.;

Update:2023-01-27 00:40 IST

குடியரசு தின விழா

74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் காலை 8.05 மணியளவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் பறக்க விட்டனர்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கலந்து கொண்டார்.

18 போலீசாருக்கு பதக்கம்

இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்த 18 போலீசாருக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். மேலும் 50 போலீசாருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தார்களின் வாரிசுதாரர்கள் 10 பேருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

அதனை தொடர்ந்து தீயணைப்பு துறையில் சிறப்பாக பணிபுரிந்த 7 வீரர்களுக்கும், அரசுத்துறையில் திறம்பட அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதற்காகவும் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 308 பேருக்கும் என மொத்தம் 315 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 228 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அம்பிகா, போலீசார் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்