வேலையில் சேர்ப்பதற்கு முன்பாக வெளிமாநிலத்தவர்கள் மீது வழக்குகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

வெளிமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்பதை பணி வழங்குபவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேலூரில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறினார்

Update: 2022-05-29 13:50 GMT

வேலூர்:

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட காவல்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு வேலூர் சரகத்தில் சட்டம் ஒழுங்கு, குற்ற செயல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பது குறித்து மாவட்டம் வாரியாக போலீஸ் அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.

பின்னர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 15 குழுக்களை சேர்ந்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

ஆய்வுக்கு பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில்,

ராமேஸ்வரம் மீனவப்பெண் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் தற்போது வெளி (வட) மாநிலத்தவர்கள் கணக்கெடுப்பு நடந்துள்ளது.

அதேபோன்று பல்வேறு நகரங்களிலும் வெளிமாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியானது நடந்து வருகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேலையில் சேர்ப்பதற்கு முன்னதாக அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பதை தொழில் வழங்குபவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

காவல்துறை சார்பிலும் நடத்தை பரிசோதனை நடத்தப்படுவதற்கான அமைப்புகள் உள்ளது. காவலன் செயலியிலும் அதற்கான வசதிகள் உள்ளது. காவல்துறையில் ஏற்கனவே காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோருக்கு வாரத்துக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும். காவல்துறை உயர் அதிகாரிகளால் கீழ்மட்ட போலீசாருக்கு இடையூறு ஏற்படுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தான் இதுபோன்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்