பா.ஜனதாவின் கைத்தடியாக அமலாக்கத்துறை மாறிவிட்டது - திருச்சியில் முத்தரசன் பேட்டி

பா.ஜனதாவின் கைத்தடியாக அமலாக்கத்துறை மாறிவிட்டது என்று திருச்சியில் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-07-03 18:58 GMT

பா.ஜனதாவின் கைத்தடியாக அமலாக்கத்துறை மாறிவிட்டது என்று திருச்சியில் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பா.ஜனதா கட்சியை தோல்வி அடைய செய்யும் வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னெடுத்து வருகிறது. பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை கொண்டு போட்டி அரசு நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் செந்தில் பாலாஜி விவகாரத்தில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்ன கவர்னர் ஆர்.என்.ரவி, பின்னர் அதனை நிறுத்தி வைக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் குழப்பமான நிலைகளை உருவாக்கி போட்டி அரசாங்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் கலவரத்தை கவர்னர் உருவாக்க முயற்சிக்கிறார். தமிழக கவர்னர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை திரும்பப்பெற வேண்டும்.

பா.ஜனதாவின் கைத்தடியாக..

மராட்டியத்தில் சரத்பவார் கட்சி உடைந்ததற்கு அமலாக்கத்துறை தான் காரணம். அமலாக்கத்துறை அங்கு அவர்கள் பணியை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்கள். பா.ஜனதாவின் கைத்தடியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கட்சிகளை உடைக்கும் வேலைகளை அமலாக்கத்துறை செய்வார்கள். தமிழகத்தில் அமலாக்கத்துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என அண்ணாமலை அதிகாரி போல கூறி வருகிறார். அமலாக்கத்துறைக்கு அண்ணாமலைதான் வழிகாட்டுகிறாரா? என்று தெரியவில்லை. பா.ஜனதாவை எதிர்த்து பேசினால் வழக்கு உண்டு, சிறை உண்டு. இதுதான் ஜனநாயகம். பொது சிவில் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து மக்களை திசை திருப்பி பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டு செல்ல மேற்கொண்டு வருகிறார் மோடி.

மேகதாது

கர்நாடகா மேகதாதுவில் மீண்டும் அணை கட்டுவோம் என்று கூறி வருகின்றனர். அந்த திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். தமிழ் மாநில விவசாய மாநாடு வருகிற 28, 29-ந்தேதிகளில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்