விழுந்தமாவடி கடற்கரையில் 4 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு

விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் கஜா புயலின் போது முறிந்து விழுந்த உயர்கோபுர மின்விளக்கு 4 ஆண்டுகளாக அங்கேயே கிடைக்கிறது. இதை அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-10-11 00:15 IST

வேதாரண்யம்:-

விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் கஜா புயலின் போது முறிந்து விழுந்த உயர்கோபுர மின்விளக்கு 4 ஆண்டுகளாக அங்கேயே கிடைக்கிறது. இதை அகற்றிவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என கிராம பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுந்தமாவடி மீனவ  கிராமம்

வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் பைபர் படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனவர்களின் வசதிக்காக கடற்கரையோரம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

இந்த உயர்கோபுர மின் விளக்கால் இரவு நேரத்தில் கடற்கரை முழுவதும் வெளிச்சமாக காணப்பட்டது. இந்த மின்கோபுர விளக்கின் வெளிச்சத்தை அடையாளம் வைத்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கரை திரும்பினர்.

புயலில் முறிந்து விழுந்த உயர்கோபுர மின்விளக்கு

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது இந்த உயர் கோபுர மின் விளக்கு முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த மின்விளக்கு இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இந்த மின்விளக்கை அகற்றி, புதிதாக அமைத்து தரவேண்டும் என மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறிந்து கிடக்கும் மின்விளக்கை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்