தக்கலை அருகே வெளிநாடு செல்ல இருந்த நிலையில் நர்சு திடீர் சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை

தக்கலை அருகே வெளிநாடு செல்ல இருந்த நிலையில் நர்சு திடீரென இறந்தார். இந்த சாவுக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-18 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே வெளிநாடு செல்ல இருந்த நிலையில் நர்சு திடீரென இறந்தார். இந்த சாவுக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்சு

தக்கலை அருகே உள்ள சாரோடு வெட்டுக்காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகள் ரஜினிகாந்தி (வயது 37). இவர் மும்பையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் ரஜினிகாந்திக்கும், அதே ஊரை சேர்ந்த சஞ்சய்குமார் (42) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சஞ்சய்குமாரும் மனைவியுடன் மும்பைக்கு சென்றார். அங்கு அவர் கப்பலுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

வீட்டில் தூங்கிய நிலையில்...

இதற்கிடையே மும்பையில் இருந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரஜினிகாந்தி வெட்டுக் காட்டுவிளைக்கு வந்து மாமியார் தேவமணியுடன் தங்கியிருந்தார். பின்னர் அவர் அடுத்த வாரம் லண்டனுக்கு வேலைக்கு செல்ல தயாராக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உணவு சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார். தூங்குவதற்கு முன்பு நள்ளிரவு 12 மணி வரை மும்பையில் உள்ள கணவருடன் அவர் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் தூங்கி விட்டார். மாமியார் தேவமணி கீழ்தளத்தில் உள்ள அறையில் தூங்கியுள்ளார்.

திடீர் சாவு

ஆனால் நேற்று காலை 8 மணி ஆன பிறகும் ரஜினிகாந்தி அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அப்போது உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்து ரஜினிகாந்தியை எங்கே என மாமியாரிடம் கேட்டுள்ளார். உடனே அவர் இன்னும் மாடியில் இருந்து கீழே வரவில்லை என கூறியுள்ளார்.

அங்கு உறவினர் உள்ளே சென்று அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அவர் பேச்சு, மூச்சின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரஜினிகாந்தியை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும் இந்த திடீர் சாவு குறித்து ரஜினிகாந்தியின் சகோதரர் ஜெயசீலன் தக்கலை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதைத்தொடர்ந்து ரஜினிகாந்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே மனைவியின் திடீர் மரணத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சய்குமார் மும்பையில் இருந்து உடனே புறப்பட்டு வந்தார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருந்த நிலையில் நர்சு திடீரென இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ேமலும் இந்த சாவுக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்