இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-12-11 08:59 IST

கோப்புப்படம்


Live Updates
2025-12-11 14:50 GMT

அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் மேயர் பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம் வார்டு-74ல் பனந்தோப்பு இரயில்வே காலனி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா அவர்கள், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தாயகம் கவி அவர்கள் முன்னிலையில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2025-12-11 14:48 GMT

அருணாசல பிரதேசம்: பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி; 3 பேர் மாயம்

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம் அடி ஆழம் கொண்ட பள்ளம் ஒன்றில் திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி லாரியில் இருந்த 18 பேர் பலியானார்கள். 3 பேர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 18 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார் என தின்சுகியா மாவட்ட ஆணையாளர் ஸ்வப்னீல் பால் கூறினார்.

2025-12-11 14:46 GMT

முதன்முறையாக காஸ்பியன் கடலில் ரஷிய எண்ணெய் களம் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த சில வாரங்களுக்கு முன், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மிரட்டல் விடும் வகையில் பேசினார். உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவதே, இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான வழியாக இருக்கும் என புதின் அப்போது கூறினார்.

அவர் தொடர்ந்து, பொதுவான கடல் பகுதி கூட இல்லாமல், மற்றொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது என்பது திருட்டுத்தனம் ஆகும். உக்ரைனின் இந்த திருட்டுத்தனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரஷியா பரிசீலனை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார். உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதலை விரிவுப்படுத்தும். இந்த துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் புதின் கூறினார்.

இந்த தாக்குதல்களில் அந்த இரு கப்பல்களும் கடுமையாக சேதமடைந்து உள்ளன. செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட்டன என உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்தன. இது, ரஷிய எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கும் என்றும் உக்ரைன் அப்போது தெரிவித்து இருந்தது.

2025-12-11 14:45 GMT

வங்காள தேசத்தில் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல்

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் ஷேக் ஹசீனா வங்காள தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு வங்காள தேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் சமீபத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவரை நாடு கடத்தவும் இந்தியாவிடம் வங்காள தேசம் கோரிக்கை விடுத்தது. வங்காள தேசத்தின் கோரிக்கையை இந்தியா ஆராய்ந்து வருவதாக வெளியுறவு துறை தெரிவித்தது.

2025-12-11 13:16 GMT

கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கச்சா எண்ணெய் கப்பலை குறிவைத்து தாக்கி அழித்து உக்ரைன் ராணுவம். நள்ளிரவில் ரஷிய தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து உக்ரைன் பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

2025-12-11 13:11 GMT

வங்காள தேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்ட நிலையில் முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-11 12:00 GMT

டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி ஐகோர்ட்டு. 2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிச.16 - 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2025-12-11 11:49 GMT

பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை விற்பது உள்பட ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதனை பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளிவரும் டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.

பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகள் மற்றும் வருங்கால நடவடிக்கைகளுக்கு தயாராவது ஆகிய அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதி அளிக்கும் என இதுதொடர்பாக, அமெரிக்க காங்கிரசுக்கு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு கழகம் வெளியிட்ட கடிதம் தெரிவிக்கின்றது.

2025-12-11 11:47 GMT

முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர்|அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 2வது டி20 இன்று நடைபெறுகிறது.

2025-12-11 11:45 GMT

தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் படிவங்கள் 100 சதவிகிதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்