இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 08.12.2025 முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான 07.12.2025 அன்று இரவிலிருந்தே போராட்டத்திற்கு புறப்படத் தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.
அதையும் மீறி பஸ்கள், ரெயில்கள் மூலமாக சென்னை சென்ற ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோரை போலீசார் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்துள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அங்கிருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டபோது அங்கும் வந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை.
இதனால் நாளை (12.12.2025) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
அதுபோல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார் அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.
மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும். எனவே ஆசிரியர் பணியிடம் காலி ஆகாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்-அமைச்சரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.