சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்' (பூமியின் வெற்றியாளர்கள்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரியா சாகு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த விருது சுற்றுசூழலுக்காக சிறந்த பங்களிப்பை வழங்க கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த நிலையில் ஐ.நா.வின் விருதை பெற்றுள்ள சுப்ரியா சாகுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்' விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள்!
ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.