என்ஜினீயரிங் பிரிவு அதிகாரிகளை மாற்ற வேண்டும்

ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் என்ஜினீயரிங் பிரிவு அதிகாரிகளை மாற்ற கோரி பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.;

Update:2023-03-25 00:15 IST

பொள்ளாச்சி

ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் என்ஜினீயரிங் பிரிவு அதிகாரிகளை மாற்ற கோரி பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.

சுகாதாரம் பாதிப்பு

பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் உள்பட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் தங்களது வார்டு தொடர்புடைய பிரச்சினைகளை சுட்டி காட்டி பேசினார்கள்.

கவுன்சிலர் துரைபாய் (ம.தி.மு.க.):- பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு, வணிக நிறுவன கட்டிடங்களுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தாமதமாக நடைபெறுகிறது. முதலில் வணிக கட்டிடங்களுக்கு தான் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால், பணிகளை சரியாக செய்யாததால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அழகாபுரி வீதியில் உள்ள உர மையத்திற்கு பிளாஸ்டிக் பேக்கிங் செய்யும் எந்திரம் வந்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இன்னும் பணிகளை தொடங்காமல் உள்ளனர்.

கவுன்சிலர் வெளிநடப்பு

மேலும் குமரன் நகரில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் சிறிய பணி மட்டும் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால், ஸ்கேட்டிங் மைதானத்தில் சாலை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து என்ஜினீயர்கள் அனைவரும் அங்கு இருக்கின்றனர். என்ஜினீயரிங் பிரிவு ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, என்ஜினீயரிங் பிரிவில் உள்ள அனைவரையும் பணி மாற்றம் செய்ய கோரி வெளிநடப்பு செய்கின்றேன்.

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.):- பொள்ளாச்சி நகரில் குடிநீர் வினியோகம் சரிவர செய்வதில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ராஜாமில் ரோட்டில் சாலை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. 1-வது வார்டிலும் சாலை பணி தொடங்காமல் உள்ளது. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிப்படுகிறது.

தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்:- அனைத்து வார்டுகளையும் ஒரே மாதிரியாக தான் பார்க்கிறோம். வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை.

Tags:    

மேலும் செய்திகள்